அமேசான் கிண்டிலில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரால் எழுதி வெளியிடப்படும் முதல் தமிழ் புத்தகம் இது.
ஆசிரியரைப் பற்றி
பார்வையற்றவன் என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் பொன்.சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர். பிறவியிலேயே பார்வையை இழந்த இவர், தற்போது காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். மேலும், பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியர் இதழின் இணையாசிரியராகவும் உள்ளார்.
மேடைப்பேச்சு, பாடல் பாடுதல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், விளையாட்டு வீரர் என பன்முக திறமை கொண்டவர்.
’என்றேனும் ஒரு நாள் நான் கவிதை எழுதக் கூடும்’ எனும் இக்கவிதைத் தொகுப்பு, காதல் கவிதைகளை உள்ளடக்கியது. காதலாய் கசிந்துருகிய தருணங்களையும், காதலில் கசிந்துருகிய தருணங்களையும் கவிதைகளாய் வடித்துள்ளேன். காதலும் காதல் நிமித்தமுமே என் நூலின் பாடுபொருள்.
இத்தொகுப்பில் முரட்டு சிங்கில்களின் ஏக்கங்களை நீங்கள் மென் பகடியாய் தரிசிக்கலாம். இங்கே மென் பகடி என்ற வார்த்தையை குறிப்பிடக் காரணம் எனக்கும் கொஞ்சம் கவிதை பரிச்சயம் இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்திக்கொள்ளவே. கவிதைகளைப் படிக்கும்போது கல்லூரி நினைவுகள் உங்கள் மனதில் இருந்து எட்டிப் பார்க்கும்.
திறனாய்வாளர்கள் இவை கவிதையா என கோட்பாடு சார்ந்து வினா எழுப்பக்கூடும். இக்கவிதைகள் அதற்கெல்லாம் தகுதியற்றவை. ஒரு பாமரனின் கூப்பாடே இக்கவிதைத்தொகுப்பு.
” அவரவர் கவிதையை அவரவர் தான் எழுத வேண்டும்” என பசுவையா கூறியிருக்கிறார். எனவே என் கவிதைகளை என் போக்கில் எழுதியிருக்கிறேன்.
“காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது”
என – கி.ரா குறிப்பிடுகின்றார். அவ்வாறு வந்து கொண்டே இருந்த காதல்களின், நொந்துபோன நிமிடங்களை கவிதையாக்கியிருக்கிறேன்.
இறுதியாய் ஒன்று சொல்லவேண்டும். இந்நூலை பரீட்சார்த்த முயற்சியாய் அமேசானில் வெளியிடுவதற்காக .தயாரித்திருக்கிறேன். பெரிதாய் எழுத்துப்பிழைகளையோ, அச்சுப்பிழைகளையோ கணக்கில் எடுக்கவில்லை. இம்முயற்சி வெற்றிபெற்றால் மறுமுறை துல்லியமான
வடிவமைப்புடன் புத்தகத்தை தர முயல்கிறேன்.
இவன்: பார்வையற்றவன்
தொடர்பிற்கு
மின்னஞ்சல்: paarvaiyatravan@gmail.com
கைபேசி: 9159669269